Friday, March 31, 2006

யார் சிறந்த அரசியல்வாதி?

இன்று காலை படித்தது. எதற்கு இக்கட்டுரையில் உஸாமா பின்லாடன் வந்தார் என்று இன்னும் எனக்கு புரியவில்லை.


யார் சிறந்த அரசியல்வாதி?

அரசியல்வாதி என்பவன் ஓர் ஆலயத்தின் மதில்சுவர்; சிறந்த அரசியல்வாதியோ ஆலயத்தின் பீடம்.

அரசியல்வாதி உண்மையைத் தவிர எல்லாம் பேசுவான்; சிறந்த அரசியல்வாதியோ உண்மையை மட்டுமே பேசுவான்.

தனது நிலையை உயர்த்த நாட்டைத் தாழ்த்துபவன் அரசியல்வாதி; நாட்டை உயர்த்த தனது எல்லா நிலைகளையும் தாழ்த்துபவன் சிறந்த அரசியல்வாதி.

தன்னலத்திற்காக மக்களைத் திண்டாட வைப்பவன் அரசியல்வாதி; மக்கள் பொதுநலத்திற்காகத் தன்னையே தியாகம் செய்பவன் சிறந்த அரசியல்வாதி.

அரசியல்வாதியின் உருவப்படம் மண் சுவற்றில் ஒட்டப்படும்; சிறந்த அரசியல்வாதியின் உருவப்படமோ மக்கள் மனச்சுவற்றில் ஒட்டப்படும்.

"நல்ல எண்ணம்', "நேர்மையான உழைப்பு', "தன்னலமற்ற தொண்டு', "தீயோரைச் சேராமை', "எதிர்க்கட்சியினரை மதித்தல்' இவ்வைந்தும் ஒரு சிறந்த அரசியல்வாதியின் நிலையான குணங்களாயிருக்கும்.

அன்றைய தமிழக முதல்வர் அறிஞர் அண்ணாவிடம் ஒரு மாணவன் ஆட்டோகிராஃப் வாங்க வந்தபோது, "தம்பி, உன்னிடம் நான் வந்து ஆட்டோகிராஃப் வாங்கும் அளவிற்கு என்னைவிட நீ வாழ்வில் உயர வேண்டும்' என்று வாழ்த்தினார்.

"தன்னைவிட தன் நாட்டு மக்கள் உயர வேண்டும்' என்ற "நல்ல எண்ணம்' கொண்ட அறிஞர் அண்ணா சிறந்த அரசியல்வாதி.

அன்று இந்தியப் பிரதமராயிருந்த லால் பகதூர் சாஸ்திரி, "தன் நண்பனின் திருமணத்திற்குச் செல்ல வேண்டும், அன்பளிப்பாய் ஏதேனும் வாங்கிக் கொடுக்கப் பணமில்லையே' என்று தன் மனைவியிடம் சொல்ல, அவரது மனைவியோ, "இந்த மாதம் நீங்கள் வாங்கி வந்த ஊதியத்தில் 25 ரூபாய் மிச்சம் பண்ணி வைத்திருக்கிறேன்' என்று கொடுத்தார்.

நண்பனின் திருமணத்திற்குச் சென்று வந்த லால் பகதூர் சாஸ்திரி மறுநாள் ஒரு கடிதம் எழுதி அன்றையக் குடியரசுத் தலைவரிடம் கொடுத்தார். அதில், "அரசாங்கம் எனக்குக் கொடுக்கும் ஊதியத்தில் மாதம் 25 ரூபாய் மிச்சப்படுகிறது. எனவே, வருகின்ற மாதத்திலிருந்து என் ஊதியத்தில் 25 ரூபாயைப் பிடித்துக்கொண்டு கொடுங்கள்' என்று எழுதியிருந்தார்.

வானமும் பூமியும் வந்து வணங்க வேண்டிய "நேர்மையான உழைப்பு' கொண்ட லால் பகதூர் சாஸ்திரி சிறந்த அரசியல்வாதி.

அரசியலில் அநியாயம், அக்கிரமங்களை ஒரு சிறந்த அரசியல்வாதி ஒருபோதும் வளர்த்துவிட மாட்டான்.

1979-ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானிலிருந்து ரஷியப் படைகளை விரட்ட களத்தில் குதித்த ஒசாமா பின்லேடனை வளர்த்துவிட்டது அமெரிக்கா.

2001-ஆம் ஆண்டு அதே ஒசாமா பின்லேடனின் இயக்கத்தினரால் நியூயார்க்கிலுள்ள உலக வர்த்தக மையம் என்ற இரட்டைக் கோபுரங்களைத் தீவிரவாதத்திற்கு இரையாக்கி சரியான பாடம் கற்றது அமெரிக்கா.

"வினை விதைப்பவன் வினை அறுப்பான்' என்பதை உணர்ந்து, "தீயோரைச் சேராமை' என்னும் குணத்தில் இரும்புக் கோட்டையாய் இருப்பான் சிறந்த அரசியல்வாதி.

தென்னாப்பிரிக்காவில் இனவெறிக்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொள்ளச் சென்ற மகாத்மா காந்தியடிகளை அங்குள்ள உணவு விடுதியில் பணியாற்றிய இந்திய இளைஞன் ஒருவன் சந்தித்து, "அய்யா, எனக்கு ஆங்கிலம் பேசத் தெரிந்தால் எனது பணியில் இன்னும் ஊதியம் அதிகம் கிடைக்கும். நீங்கள் எனக்கு இலவசமாய் ஆங்கிலம் கற்றுத் தருவீர்களா?' என்று கேட்டபோது, "சரி வா கற்றுத் தருகிறேன்' என்று பதிலுரைத்தார்.

"அய்யா, தினமும் இரண்டு மைல் தூரம் நடந்து வந்து உங்களைப் பார்ப்பது எனது வேலை நேரத்திற்கு ஒத்து வராதே' என்று அந்த இளைஞன் மீண்டும் சொன்னபோது, "சரி பரவாயில்லை, உனது இருப்பிடத்திற்கு நானே வந்து ஆங்கிலம் கற்றுத் தருகிறேன்' என்று கூறி, அதன்படி நடந்து, "தன்னலமற்ற தொண்டால்' உலகத் தலைவர்களுக்கெல்லாம் தலைவராய் வரலாற்றில் இடம்பெற்ற மகாத்மா காந்தியடிகள் சிறந்த அரசியல்வாதி.

"தன்னைத் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான்' என்பது வேதாகமத்திலுள்ள உயிருள்ள வார்த்தை.

அன்று தமிழக முதல்வராய் பெருந்தலைவர் காமராஜ் இருந்தபோது ஓர் எதிர்க்கட்சி சட்டப்பேரவை உறுப்பினரின் தாயார் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் இறந்து, அவரது உடல் இல்லத்திற்கு எடுத்து வரப்பட்டபோது எல்லோருக்கும் முன்னதாக அங்கு வந்து, அந்த உடலைப் பெற்றுக் கொண்டு, "எதிர்க்கட்சியினரை மதிக்கின்ற' குணத்தால் எல்லோர் மனத்திலும் இடம்பிடித்த பெருந்தலைவர் காமராஜ் சிறந்த அரசியல்வாதி.

மேற்சொன்ன ஐந்து குணங்களையும் சரியாகப் பெற்ற ஒவ்வொருவரும் சிறந்த அரசியல்வாதி.

எந்தப் பொருளிலும் அதன் மாதிரியை வைத்துக் கொண்டு அதைவிட அழகான பொருளை உருவாக்க முடியுமென்றால் மனிதனில் மட்டும் அது ஏன் முடியாது?

மாநாடு, நடைபயணம், பிறந்தநாள் கொண்டாட்டம், கட் - அவுட் எல்லாம் ஒரு தலைவனை அந்தக் கட்சிக்குள் மட்டுமே உயர்த்தும். உண்மையான மக்கள் தொண்டு மட்டுமே ஒரு தலைவனை எல்லா மக்கள் மனத்திலும் உயர்த்தும்.

தொகுதிவாரியாக மக்களின் குறைகளை உடனுக்குடன் போக்கும் கட்சியே ஒரு சிறந்த அரசியல் கட்சியாய் வளர்ந்து, அதுவே ஒரு சிறந்த அரசியல்வாதியை உருவாக்கும்.

ஒரு சிறந்த அரசியல்வாதி உருவானால் லஞ்சம், ஊழல், அடிதடி, விரக்தி மறைந்து, அமைதி, நீதி, நேர்மை, மனிதநேயம், உயர்ந்த நெறிமுறைகளெல்லாம் உயிர் பெற்று எழும்.

ஒரு சிறந்த அரசியல்வாதி தேர்தலில் கூட்டணி சேர்க்கவும் மாட்டான்; தோல்வியைத் தன் வாழ்நாளில் பார்க்கவும் மாட்டான்.

ஒரு சிறந்த அரசியல்வாதி உருவானால் நாட்டில் வியாபாரச் சந்தையாகிப்போன அரசியல் பொதுமக்களின் தொண்டு நிறுவனமாக இன்றே மாறும்.

ஒரு சிறந்த அரசியல்வாதி என்பவன் மக்களின் உண்மைத் தொண்டன்: அன்பில் முல்லை; ஆதரவில் எல்லை; அதனால் அவப்பெயர் அவனுக்கு இல்லை.

"மக்கள் நலத்திட்டத்திற்கு அரசு ஒரு ரூபாய் ஒதுக்கினால் அதில் 10 காசுகள்தான் அத்திட்டத்திற்குப் போகிறது, மீதி 90 காசுகள் எங்கு போகிறது என்பதே தெரியவில்லை'' என்று மனம் குமுறினார் மறைந்த இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி.

மக்கள் நலத்திட்டத்திற்கு ஒதுக்கப்படும் தொகையை முழுமையாக அத்திட்டத்திற்கே செலவிட்டு, தொகுதி மக்கள் அனைவரின் வணக்கத்திற்குரியவனாய் உயர்பவன் சிறந்த அரசியல்வாதி.

தொழில் புரட்சி மற்றும் பசுமைப் புரட்சி வாயிலாக வளர்ச்சித் திட்டங்களை அதிகப்படுத்தி, அதில் கிடைக்கும் கூடுதல் வருவாயில் மேலும் பல நலத்திட்டங்களைச் செய்து குவிப்பவன் சிறந்த அரசியல்வாதி.

தன்னைத் துன்புறுத்தியவரைப் பழி வாங்க தாதாக்களைத் தேடாமல், தன் நாட்டை உயர்த்த நிபுணர்களையும், விஞ்ஞானிகளையும் தேடுபவன் சிறந்த அரசியல்வாதி.

தென்னாப்பிரிக்காவில் 25 ஆண்டுகால சிறைவாசத்திற்குப் பின் திரும்பி வந்த நெல்சன் மண்டேலாவிடம், ""உங்களைச் சிறை வைத்தவரை என்ன செய்வது?'' என்று கேட்டபோது, "நாட்டைச் சீரமைப்போம் வாருங்கள்' என்று நேசக்குரல் கொடுத்த நெல்சன் மண்டேலா சிறந்த அரசியல்வாதி.

அரசியல்வாதிகளின் ஆணவம், ஆடம்பரம், தற்பெருமை எல்லாம் ஏழைகளின் கண்ணீரின் முன் ஒருநாள் நொறுங்கும்.

சிறந்த அரசியல்வாதியின் உண்மை, எளிமை, நியாயம், மக்கள் தொண்டு எல்லாம் ஏழைகளின் அழுகைக் கண்ணீரை ஆனந்தக் கண்ணீராய் மாற்றும்.

"தேர்தலில் ஏன் வாக்களித்தாய்?' என்று காரணம் கேட்டால் ஒவ்வொருவரும் வெவ்வேறு பதிலைச் சொல்கிறோமே தவிர "ஒரு சிறந்த அரசியல்வாதி என்பதால் வாக்களித்தேன்' என்று யாராவது சொல்கின்றார்களா?

ஒரு நாட்டின் மிகப்பெரிய வீழ்ச்சிக்கும் எழுச்சிக்கும் அந்த நாட்டைத் தலைமையேற்று நடத்தும் அரசியல் தலைவனே காரணம்.

அரசியல்வாதிகளால் ஒவ்வொரு துறையிலும் மக்கள் அனுபவிக்கும் துயரங்களைத் துடைக்க உடனடித் தேவை ஒரு சிறந்த அரசியல்வாதி.

ஒரு சிறந்த அரசியல்வாதி உருவானால் வளமான நாடு, அமைதியான வாழ்க்கை, நல்ல கலாசாரம், நிலையான அன்பு எல்லோரையும் உடனே வந்து சேரும்.

ஒரு சிறந்த நாடு என்பது ஒரு சிறந்த அரசியல்வாதியின் கரங்களால் அழகாகச் செதுக்கப்படுகிறது.

ஒரு சிறந்த அரசியல்வாதி என்பவன் பொது மக்களின் பையிலுள்ள பணம்; பசியில் உணவு; தாகத்தில் அருவி; வெயிலில் நிழல்; வெற்றியின் அறிகுறி.

ஒரு சிறந்த அரசியல்வாதிக்குக் கொடுக்க வேண்டிய இடம் இன்றைக்கு ஒவ்வொருவர் இதயத்திலும் காலியாகவே இருக்கிறது.

நேர்மையான மக்கள் தொண்டால் நீங்காத புகழ் சேர்க்கும் அந்தச் சிறந்த அரசியல்வாதி யார்?

- ஜே. அருள்தாசன்

நன்றி: தினமணி தலையங்கம் - ஏப்ரல் 1, 2006 (www.dinamani.com)

No comments: